இயற்கை குடிலின் இரசாயனக் கலப்பின்றி கரும்பு வளர்ப்பதோடு நாட்டு சர்க்கரை தயாரிக்க இரசாயனம் கலவாத முறைகளை செய்து வருகிறோம்.
முதலில் ஏர் உழுது மண்ணை பண்படுத்தி வாழை தோட்ட கழிவுகள் மற்றும் தென்னை மர கழிவுகளை போட்டு 40 முதல் 45 தினங்கள் வரை அதனை மக்க வைக்கிறோம்.
அடுத்து 3 அடி அகலம் விட்டு பார்பிடித்து மண் பதப்படுத்தப்பட்டு 353 ரக கரும்பு கரணைகள் ஊன்றுகிறோம். மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு பஞ்சகாவ்யம், பவர்ஸ்பிரேயரில் அடிக்கப்படுகிறது. மாதம் ஒரு தடவை நாட்டு மாட்டின் சாணம், மற்றும் சிறுநீர் அடங்கிய அமிர்தகரைசலை தண்ணீர் பாயும் பொழுது அத்துடன் கலந்து விடப்படுகிறது. இரசாயன பூச்சி மருந்துகள் ஏதும் அடிப்பதில்லை.
ஒரு தொட்டியில் பசு சிறுநீர் தேக்கி அதில் நொச்சி, எருக்கன், வேப்பிலை, ஆடுதின்ன பாலை, வெட்பாலை, சிறியாநங்கை, நாய் துளசி, துளசி இவைகளில் எது கிடைத்தாலும் போட்டு 15 முதல் 20 தினங்கள் ஊறவைத்து எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்கிறோம். இதனை மட்டும் தேவைப்படும் காலங்களில் பவர் ஸ்பிரேயரில் ஒரு டேங்கிற்கு 500 மில்லி கலந்து அடிக்கிறோம். விளைச்சல் மிக மிக நன்றாக இருப்பதோடு பூச்சி தாக்குதல்கள் ஏதும் இருப்பதில்லை.
330 நாட்களில் கரும்பு வெட்டப்படுகிறது. அதன் பின்பு 3 அல்லது 4 முறை வெட்டிய கட்டையை வளர விட்டு 300 நாட்களில் மீண்டும் அறுவடை செய்கிறோம்.
சுமார் 1 ஏக்கருக்கு 40 முதல் 48 டன் கரும்பு கிடைக்கிறது. கரும்பினை ஆலையில் இட்டு சாறு பிழியப்படுகிறது. ஏறக்குறைய 1 டன் கரும்பு 100 முதல் 120 கிலோ வரை சர்க்கரை கொடுக்கிறது. கரும்பிலிருந்து கரும்புச் சாறு எடுத்து கொப்பரையில் ஊற்றி காய்ச்சப்படுகிறது. 60°C காய்ச்சலில் முதலில் ஒரு கொப்பரைக்கு 100 கிராம் ஒடைக்கல் சுண்ணாம்பு (இயற்கையில் அதிக கால்சியம் நிறைந்தது ) போடப்படுகிறது.
அதன் பின்பு சோற்று கற்றாழை ஒரு கொப்பரைக்கு ஒன்று முதல் இரண்டு லிட்டர் வரை ஊற்றி கொதி நிலைக்கு கொண்டு வருகிறோம். இதனை போடுவதின் மூலம் கரும்புச் சாற்றிலுள்ள அழுக்குகள் பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. கொதிநிலையில் இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு பதிலாக 100 முதல் 250 மில்லி தேங்காய் எண்ணெய் கலக்கப்படுகிறது. சரியான பதத்தில் இறக்கி சர்க்கரையை தேய்க்க பதம் பார்த்து தேய்யக்ப்படுகிறது,,.
ஒடைக்கல் சுண்ணாம்பு சேர்க்க படுவதால் இயற்கையில் அதிக கால்சியம் நிறைந்தது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது, பெரியவர்களின் மூட்டு தேய்மானம், மற்றும் எலும்புகள் வளைதல் போன்ற நோய்கள் தீர்க்கப்படுகிறது.
ஒரு கொப்பரை கரும்பு சாற்றில் 90 முதல் 100 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 5 அல்லது 10 கொப்பரை காய்ச்சுகிறோம். மொத்தமாக விற்பனை செய்கிறோம்.
பாரம்பரிய மிக்க இயற்கை வழி வேளாண்மை மூலம் இரசாயனக் கலப்பற்ற கரும்பினை வளர்த்து அதன் வழி இரசாயனம் கலவாத கரும்புச் சர்க்கரையை கொடுப்பது மூலம் தமிழக மக்களை சுகாதாரத்தோடு வாழ வழி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.